திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.63 திருக்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை |
இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப்
புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்கா டுதுறைக் கோலக் கபாலியே.
|
1 |
முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர்ச் சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங் காடு துறையுறை
அத்த னென்னஅண் ணித்திட் டிருந்ததே.
|
2 |
குளிர்பு னற்குரங் காடு துறையனைத்
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந்
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.
|
3 |
மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங் காடு துறைதனில்
அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே.
|
4 |
ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன்
காலத் தானுயிர் போக்கிய காலினன்
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங் காடு துறையனே.
|
5 |
ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப்
பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங்
கூட்டி னான்குரங் காடு துறையனே.
|
6 |
மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை
ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண்
போத்தன் றானவள் பொங்கு சினந்தணி
கூத்தன் றான்குரங் காடு துறையனே.
|
7 |
நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்னழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடங்
கூடு மின்குரங் காடு துறையையே.
|
8 |
தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்ற அந்தக னையயிற் சூலத்தாற்
கொன்ற வன்குரங் காடு துறையனே.
|
9 |
நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநற்
கொற்ற வன்குரங் காடு துறைதொழப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே.
|
10 |
கடுத்த தேரரக் கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங் காடு துறையனே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |